நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், தனது X சமூக ஊடகத் தளத்தில், உங்கள் குழந்தைகளின் நலனுக்காக நெட்ஃபிளிக்ஸை ரத்து செய்யுங்கள்" என பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மஸ்கின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. அது நெட்ஃபிளிக்ஸ் அனிமேஷன் தொடரான Dead End: Paranormal Park-ஐ உருவாக்கிய ஹமிஷ் ஸ்டீல், சுட்டு கொல்லப்பட்ட வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்கை "நாஜி" என்று குறிப்பிட்டு, அவரது மரணத்தை கொண்டாடும் விதமாக பதிவிட்டார். "கொலையை கொண்டாடுபவர்களை பணியில் அமர்த்தினால், என் பணத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது," என்று ஒரு பயனர் சந்தாவை ரத்து செய்ததாக பதிவிட்டதற்கு மஸ்க் ஆதரவு தெரிவித்தார்.
நெட்ஃபிளிக்ஸ் அதன் பன்முகத்தன்மை அறிக்கையில் "வெள்ளையர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக" மஸ்க் குற்றம் சாட்டினார். அத்துடன், ஸ்டீலின் தொடர், ஓரினச்சேர்க்கை தொடர்பான உள்ளடக்கத்தை குழந்தைகள் மீது திணிப்பதாகவும் பல பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் விளைவாக, மஸ்க் தனது நெட்ஃபிக்ஸ் சந்தாவை ரத்து செய்ததுடன், தனது ஃபாலோயர்களையும் ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து பல பயனர்கள் சந்தாவை ரத்து செய்த ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து வருகின்றனர்.
Edited by Mahendran