தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள், நாளை முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளன. தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பணிச்சுமை மற்றும் நிதிப்பற்றாக்குறையை கண்டித்து, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு இந்த பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சுமார் 6 கோடி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை சேகரிக்கும் முக்கிய பணி இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு தேவையான முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், கேரளாவில் பணி அழுத்தம் காரணமாக BLO ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில், நிலுவையிலுள்ள பணிகளுக்கு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்றும், போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை புறக்கணிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் தேர்தலுக்கான முக்கிய பணியான வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்தில் தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளது.
Edited by Mahendran