முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராஜ்நாத் சிங்.. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கோரினாரா?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனின் பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்தார். அப்போது, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் நட்டா தெரிவித்திருந்தார்.
இதன் ஒரு பகுதியாக, இன்று காலை தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு தி.மு.க.விடம் கோரப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு தமிழர் என்பதால், தி.மு.க. அவருக்கு ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edited by Mahendran