வியாழன், 21 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (14:34 IST)

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்! - ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை!

EPS ambulance

வேலூரில் பிரச்சாரக் கூட்டத்தின் நடுவே புகுந்த ஆம்புலன்ஸை எடப்பாடி பழனிசாமி எச்சரித்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம், இதற்காக எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.

 

வேலூர் அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக சென்றதால் டென்ஷன் ஆன அவர், மீண்டும் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் டிரைவர்தான் நோயாளியாக திரும்ப செல்வார் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் “நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். 

நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

அதிமுக பொதுச்செயலாளர் திரு.பழனிசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Report

Edit by Prasanth.K