மதுரை அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.
புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,
அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K