கரூரில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை தொடர்ந்து தவெக, பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாக விமர்சித்துள்ளார்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தவெக மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்கு கிளம்பி சென்ற நிலையில், அவர் பாஜகவுடன் கூட்டணி பேச செல்கிறாரா என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் அவர் தேசிய விளையாட்டு போட்டிகளுக்காக செல்வதாக விளக்கமளிக்கப்பட்டது.
கரூர் நிகழ்வு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “பேரிடரின்போது தமிழ்நாட்டிற்கு வராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் வ்ருகிறார். கும்பமேளா, மணிப்பூர் பிரச்சினைகளுக்கு செல்லாத பாஜக குழுவினர் கரூருக்கு மட்டும் உடனே கிளம்பி வருகின்றனர்.
மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் அடைக்கலமாகி தவறை மறைக்கும் வாஷிங்மெஷினாக பாஜக உள்ளது.
கூட்டணிக்கு யாராவது வருவார்களா என ஆள்சேர்க்கும் வேலையை பாஜக சிலருக்குக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் மீது உண்மையாகவே அக்கறை உள்ள யாரும் பாஜகவோடு கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள். காமராஜரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ்ஸின் பாதையில் பாஜக நடைபோடுகிறது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K