ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!
கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்திற்கு காரணம் கடலூர் மாவட்ட ஆட்சியர்தான் எனத் தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், விபத்து நடந்த செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் இருக்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து நிரந்தரமாக அந்த கேட்டை மூடும் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு சுரங்கப்பாதை அமைக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் ஒரு வருடமாக அனுமதி கொடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அனுமதி கொடுத்திருந்தால், இந்நேரம் அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கும் என்றும், நிரந்தரமாக அந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என்றும், மக்களும் வாகனங்களும் சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருப்பார்கள். இதனால் இன்று நடந்த விபத்து நடந்திருக்காது" என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran