செவ்வாய், 8 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 ஜூலை 2025 (13:32 IST)

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

கடலூர் அருகே இன்று காலை பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநரின் பேட்டியும், ரயில்வே நிர்வாகத்தின் அறிக்கையும் மாறுபட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் அளித்த பேட்டியில், "ரயில்வே கேட் மூடப்படவில்லை என்றும், திறந்துதான் இருந்தது என்றும், கேட் கீப்பர் அந்த இடத்திலேயே இல்லை என்றும், அதுமட்டுமின்றி ரயிலின் ஹாரன் சத்தமும் கேட்கவில்லை" என்றும் தெரிவித்தார். ஓட்டுநர் கூறியதைத்தான் அந்த வேனில் பயணம் செய்த மாணவர்களும் கூறியுள்ளனர்.
 
இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடுவதற்கு முற்பட்டபோது, வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதால் அந்த வாகனத்தை அனுமதித்ததாகவும், அப்போதுதான் இந்த விபத்து நேர்ந்ததாகவும்" கூறியுள்ளது. ஆனால், வேன் ஓட்டுநர் "கேட் மூடப்படவே இல்லை என்றும், கேட் கீப்பர் இல்லை" என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், "வேன் ஓட்டுநர் கேட்டிருந்தாலும், ரயில் வருவது தெரிந்து கேட்டைத் திறந்தது தவறு" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், தமிழக காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran