செவ்வாய், 8 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 ஜூலை 2025 (12:01 IST)

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

Stalin
கடலூரில் பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.
 
இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்த மு.க. ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்த விபத்தில் இரண்டு இளம் மாணவ செல்வங்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவர்களான நிமிலேஷ் மற்றும் சாருமதியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "இந்த விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று நபர்களுக்கும் உயர்தர சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும், மாவட்ட ஆட்சியரையும் நேரில் சென்று உதவி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Siva