1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 மே 2025 (12:22 IST)

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுவதாக கருத்துத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.

 

கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதுத்தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது FIR பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில், டாஸ்மாக் அலுவலகத்திற்கு சோதனைக்கு சென்றது ஏன்? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும், அமலாக்கத்துறை டாஸ்மாக் வழக்கில் வரம்பு மீறி செயல்படுவதாகவும், நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடந்துள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

 

தனிநபர் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத்துறையின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K