காலை உணவு விரிவாக்க திட்டம்.. மாணவர்களுக்கு பொங்கல் பறிமாறினார் முதல்வர் விஜய்..
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னை காந்தி கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தை விரிவுபடுத்தித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுக்குத் தனது கைகளால் காலை உணவை பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் இலவச காலை உணவுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள். நடப்பாண்டு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ. 217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதோடு, பசியின்றி பள்ளிக்கு வந்து மாணவர்கள் கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தொடக்க விழாவிற்குப் பிறகு வகுப்பறைகளுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
Edited by Siva

