விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு
விஜய்க்கு தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பா.ஜ.க.தான் என்றும், அவர் பா.ஜ.க.வின் ஆள் தான் என்றும்" சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை திருநெல்வேலியில் தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "விஜய்யின் மூன்று நிமிடப் பேச்சை கேட்டேன். ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் இறந்தவர் பெயரைக்கூட சரியாகச் சொல்ல தெரியவில்லை. யார் வசனம் எழுதி கொடுத்து அவர் பேசுகிறார் என்று தெரியவில்லை.
அஜித்குமார் வழக்கு விஷயத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரே அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படி இருக்க, விஜய் யார் சொல்லி இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை" என்றார்.
மேலும், "புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் அரசியல் செய்யும்போது, அவருக்கு அமித்ஷாவுடன் தொடர்பு கொண்டு, விஜய் கேட்காமலே அவருக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு தனி விமானம் வாங்கிக் கொடுத்தது பா.ஜ.க.தான். விஜய்யின் அம்மா கிறிஸ்துவர். சிறுபான்மையினர் வாக்கை உடைக்கத்தான் அவரை பா.ஜ.க. களத்தில் இறக்கி இருக்கிறது" என்றும் அப்பாவு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva