1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (17:37 IST)

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

annamalai
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையின் நிர்வாக திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தற்போது, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து வரும் அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், புதிய தலைவருக்கான தேர்தலில் அவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்து பாராட்டத்தக்க சாதனைகளை செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருடைய பங்களிப்பு ஒரு முன்மாதிரியாகும்,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 
மேலும், “அண்ணாமலையின் தலைமை நிர்வாக திறமைகளை தேசிய அளவில் பாஜக பயன்படுத்திக் கொள்ளும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அண்ணாமலைக்கு தேசிய அளவில் ஒரு முக்கிய பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran