வெள்ளி, 17 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (14:51 IST)

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

annamalai Mk stalin
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியதாவது:  
 
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின். அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்ப தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்? 
 
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. 
 
இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களே?
 
Edited by Siva