1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (18:54 IST)

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்ற உத்தரவை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்றுள்ளது.

 

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது! தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மேதகு ஆளுநரின் கடமை. ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார். மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது. இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

 

மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது. மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழ்நாடு வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது. தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று. மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு. இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K