தீபாவளி இனிப்பு பிசினஸ்.. 1 மணி நேரத்துக்கு 1 லட்சம் ஆர்டர்... ஸ்விகி வெளியிட்ட தகவல்..
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இந்தியா முழுவதும் ஸ்விகி ஆன்லைன் உணவு விநியோக சேவையில் மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா மற்றும் காஜு கட்லி ஆகியவை அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.
அனைத்து வகையான இனிப்புகளிலும் 'காஜு கட்லி' முதலிடத்தை பிடித்தது. அதனைத் தொடர்ந்து மோதிசூர் லட்டு, ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமுன் போன்றவையும் அதிகம் விரும்பப்பட்டன. பண்டிகைக் காலத்தில் உணவு விநியோகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 97,545 ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஐதராபாத்தில் ஒரு நபர் ரூ.41,895 மதிப்பிலான 57 பாக்கெட் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். மேலும், மும்பையில் ரூ.41,772-க்கு இனிப்பு வாங்கியுள்ளனர். வீடுகளில் சமைப்பதோடு இல்லாமல், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடும் வழக்கமும் அதிகரித்து, ஸ்விகி டைனவுட் முன்பதிவு கடந்த ஆண்டை விட 38.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் இதில் முன்னிலையில் உள்ளன. மும்பையில் ஒரே ஒரு உணவகத்தில் தீபாவளியன்று ரூ.1,34,210 அளவுக்குப் பெரிய அளவிலான உணவுப் பில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

