முதல்வர் விஜய்யின் ஆந்திரா பயணம்.. சென்னை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா?
சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய 5 ஏரிகளில் நீர்மட்டம் 35 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தின் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். நேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு பயணம் மேற்கொண்ட அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பில், சென்னை நகரின் தாகத்தைத் தீர்க்க கூடுதல் கிருஷ்ணா நதிநீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை விஜய் முன்வைத்தார். மேலும், தென்னிந்தியாவின் நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க 'கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை' தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்க பிரதமரிடம் இரு மாநிலங்களும் இணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழகம் தனது 30 சதவீத நீர்த் தேவைக்கு அண்டை மாநிலங்களையே நம்பியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டம் நிறைவேறினால் குடிநீர்ப் பஞ்சத்திற்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதுடன் விவசாயிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு பின், விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனகதுர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய், புன்னமி காட் பகுதியில் நடைபெற்ற 'விஜயவாடா உத்சவ்' விழாவில் ஆந்திர முதல்வருடன் இணைந்து பங்கேற்றார். ஆந்திர அரசு இக்கோரிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில், சென்னையின் குடிநீர்ப் பஞ்சம் முற்றிலும் முடிவுக்கு வரும்.

