சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த யூடியூபர் ஷாதாப் ஜகாதி, ஒரு சிறுமியை கொண்டு சர்ச்சைக்குரிய வசனங்களை பேசிய வீடியோவால் சர்ச்சையில் சிக்கி, கைது செய்யப்பட்டார்.
மீரட்டைச் சேர்ந்த ராகுல் என்பவர் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்ததை தொடர்ந்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திடமும் புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜகாதியை கைது செய்தனர். பின்னர் அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று விடுதலை ஆனார்.
ஜாமினில் வெளிவந்த பிறகு பேசிய ஜகாதி, அந்த வீடியோவில் இருப்பது தனது மகளும் மனைவியும் என்றும், அந்த வசனம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் விளக்கமளித்தார். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை எனக் கூறிய அவர், மக்கள் அதிருப்தியை உணர்ந்தவுடன் வீடியோவை உடனடியாக நீக்கியதாகவும் தெரிவித்தார்.
எனினும், தனது சொந்த ஊரிலேயே இந்த விவகாரம் கிளம்பியது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இனி கவனமாக வீடியோக்களை உருவாக்குவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
Edited by Siva