பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் இணை இயக்குநர்களான மோகித் பெர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெனரல் மீட்டிங் சட்டப்பூர்வமல்ல என சுட்டிக் காட்டி இந்த வழக்கை தொடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த கூட்டம், நிறுவன சட்டம் மற்றும் பிற செயல்முறை விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாக ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 10ஆம் தேதி, இந்த கூட்டத்திற்கு எதிராக மின்னஞ்சல் மூலமாக கண்டனம் தெரிவித்திருந்தும், அவருடைய எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
முக்கியமாக, அந்த கூட்டத்தில் முனீஷ் கண்ணா இயக்குநராக நியமிக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரியும், முனீஷ் கண்ணாவை இயக்குநராக செயல்பட விடக்கூடாதெனவும் அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மேலும், வருங்காலத்தில் ப்ரீத்தி ஜிந்தா, கரண் பால் ஆகிய இருவரும் இல்லாமல் கூட்டங்களை நடத்த முடியாதென தடை உத்தரவும் கோரியுள்ளார். ப்ரீத்தி ஜிந்தா மனு மீதான விசாரணையில் விரைவில் நடைபெறவுள்ளது.
Edited by Mahendran