காசோலை பரிவர்த்தனை இனி மின்னல் வேகத்தில்: சில மணிநேரங்களில் பணம் வரவு வைக்கப்படும்: ரிசர்வ் வங்கி
காசோலை பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதன் மூலம், இனி காசோலையை வங்கியில் செலுத்திய சில மணிநேரங்களிலேயே பணம் உரியவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது பேட்ஜ் முறையில் காசோலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் முறைக்கு பதிலாக, இனி புதியமுறை அமல்படுத்தப்பட உள்ளது. காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவது, தேவையற்ற தாமதத்தைக் குறைப்பது, மற்றும் வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்துவது ஆகியவையே இந்த புதிய நடைமுறையின் முக்கிய நோக்கங்கள்.
இந்த புதிய நடைமுறை இரண்டு கட்டங்களாக அமலுக்கு வருகிறது. முதல் கட்டம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மற்றும் இரண்டாம் கட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
புதிய நடைமுறையின்படி, ஒரு காசோலை காலை 10 மணி முதல் 11 மணி வரை வங்கியில் பெறப்பட்டால், அதை பிற்பகல் 2 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உறுதி செய்யப்படாவிட்டால், அந்த காசோலைக்குத் தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணம் வரவு வைக்கப்படும்.
காசோலையைப் பெற்ற வங்கி, பரிவர்த்தனை முடிந்த பின்னர், ஒரு மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும். இதன்மூலம், மின்னணு பணப் பரிவர்த்தனை போலவே, காசோலை பரிவர்த்தனைகளும் இனி வேகமாகவும், துல்லியமாகவும் நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Edited by Mahendran