ICINet: அனைத்து தோ்தல் சேவைகளுக்கும் ஒரே செயலி! தோ்தல் ஆணையம் அறிமுகம்
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்க புதிய இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் ICINet.
இது போன்ற ஒரு தளத்துக்கான தேவை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு, 36 மாநிலத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் 767 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த புதிய இணையதளத்தில் ஏற்கனவே உள்ள பல செயலிகள், வாக்காளர் உதவி மையம், சுவிதா 2.0, சி-விஜில், இஎஸ்எம்எஸ், சாக்ஷம் போன்ற 40-க்கும் மேற்பட்ட செயலிகள் ஒரே இடத்தில் இணைக்கப்படுகின்றன.
ICINet தளத்தின் மூலம், இனி பல செயலிகளை தனித்தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. ஒரே உள்நுழைவு முறையில் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம். இது கடவுச்சொல் மற்றும் நுழைவு சிக்கலைக் குறைக்கும்.
தற்போது இந்த இணையதளம் சோதனை நிலையில் உள்ளது. வலுவான இணைய பாதுகாப்பும், எளிதான பயனர் அனுபவமும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தளம் 100 கோடி வாக்காளர்கள், 45 லட்சம் வாக்குசாவடி அதிகாரிகள், 15 லட்சம் முகவர்கள், மற்றும் அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் ஆகிய அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran