கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இன்று பெரும் மோதல் ஏற்பட்டது. இதற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவின் பேரில், பிரிவினை பயங்கர நினைவு நாளை அனுசரித்ததே காரணமாகும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மாநில ஆளுநர் ராஜ் பவனிலிருந்து அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில், நாடு முழுவதும் பிரிவினை பயங்கர நினைவு நாளை அனுசரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பிரிவினை நாள் 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளையும், உயிரிழப்புகளையும் நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஏபிவிபி அமைப்பினர் காசர்கோடு அரசு கல்லூரியில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ(எம்) ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (SFI) திரண்டு, அந்த போஸ்டர்களைக் கிழித்தனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோதலை கட்டுப்படுத்தினர்.
பின்னர், ஏபிவிபி மாணவர்கள் மீண்டும் அறிவிப்புப் பலகையில் போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) மாணவர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினர் (MSF) கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு பிரிவினரும் கோஷங்களை எழுப்பி மோதலில் ஈடுபட்டதால் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநரின் உத்தரவை எந்த கல்வி நிறுவனமும் பின்பற்றக் கூடாது என்று மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது. இதை மீறி, ஏபிவிபி அமைப்பினர் இந்த நாளை அனுசரித்ததால், கல்லூரி வளாகங்களில் இந்த மோதல்கள் நடந்துள்ளன.
Edited by Siva