1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 மே 2025 (13:15 IST)

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஸின்பதர் கெல்லர் பகுதியில் இன்று  காலை பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் ஷாஹித் என்றும், அவர் அந்த குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாதுகாப்புப் படைகள் அந்த பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
 
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த முடிவுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் அமைதி நிலைமை மெதுவாக நிலைகொண்டுவருகிறது.
 
எனினும், சோபியான் பகுதியில் தொடரும் சண்டையால் அந்த இடத்தில் இன்னும் பாதுகாப்பு நிலை மிக கவனமாக கையாளப்படுகிறது.
 
Edited by Mahendran