பயிற்சி முகாமில் இருந்து திடீரென விலகிய பீட்டர்சன்.. பயிற்சியை விட இந்தியாவுக்கு செல்வது முக்கியமா?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அணியின் பயிற்சி முகாமிலிருந்து பாதியிலேயே வெளியேறி இந்தியா புறப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமின் குழுவில் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வரும் பீட்டர்சன், மும்பையில் நடைபெறவுள்ள யூடியூப் மாநாடு மற்றும் படப்பிடிப்பு பணிகளில் பங்கேற்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ள நிலையில், பீட்டர்சன் விலகியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள 46 வயதான பீட்டர்சன், ஆஸ்திரேலியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன், தனது தி ஸ்விட்ச் யூடியூப் சேனல் பணிகளுக்காக இந்தியா செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முழுநேரப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க விரும்பாத பீட்டர்சன், பகுதிநேர ஆலோசகராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்வது ஒரு இங்கிலாந்து வீரருக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த சாதனை என வீரர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர் விடைபெற்றதாக வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

