திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைமுறைக்கு வந்த 'மஹாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் - 2026' சட்டத்தை எதிர்த்துத் தானேவைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தச் சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்துதல், மோசடி மற்றும் திருமணம் மூலமாக மேற்கொள்ளப்படும் மதமாற்றங்கள் குற்றமாகக் கருதப்படுகின்றன. மேலும், மதம் மாறுவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து முன் அறிவிப்புத் தர வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேஷ் சி.திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், இச்சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 25-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தைப் பாதிப்பதாக வாதிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நபருக்கும் தங்களுக்குப் பிடித்த மதத்தைத் தேர்வு செய்ய முழுச் சுதந்திரம் உள்ளது. ஆனால், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கவும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கவுமே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினர். நீதிபதிகளின் இந்த அதிரடி கருத்துகளையடுத்து அந்த மனு திரும்ப பெறப்பட்டது.

