2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அ, ஆ கூட தெரியவில்லை.. படிக்காமலே பாஸ் நிலைக்கு முற்றுப்புள்ளியா?
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 2-ஆம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு அடிப்படை தமிழ் எழுத்துக்களான 'அ, ஆ' கூட அடையாளம் காண தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றி கழகத்தின் அரசு, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த 'திறன் ப்ளஸ் என்ற மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறன் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள 40 சதவீத மாணவர்களுக்கும் 40 நிமிடங்களில் 10 வினாக்கள் கொண்ட சோதனை நடத்தப்படும்.
இதில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை அடையாளம் காணுதல், இரண்டு எழுத்து வார்த்தைகளைப் படித்தல், எண்களை எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதக் கூட்டல், கழித்தல் திறன்கள் சோதிக்கப்படும்.
இத்தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்களின் கற்றல் திறன் உயர்த்தப்படும். "படிக்காமலே பாஸ்" என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முக்கிய நோக்கமாகும்.

