மார்பிங் மற்றும் டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: கங்கனா ரனாவத் தொடுத்த வழக்கில் அதிரடி உத்தரவு...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மார்பிங் மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களால் பிரபலங்களின் பெயர்கள் தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய முறைகேடுகளிலிருந்து தனது அடையாளத்தை பாதுகாக்க கோரி, நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விகாஸ் மகஜன், கங்கனா ரனாவத்தின் பெயர், படம் மற்றும் குரல் போன்றவற்றை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கங்கனா ரனாவத் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடான மற்றும் ஆபாசமான டீப்ஃபேக் உள்ளடக்கங்களை 72 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட வலைத்தளங்களை முடக்குவதற்கான தகுந்த அறிவுறுத்தல்களை இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு வழங்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இடைக்கால தடையுத்தரவு அடுத்த விசாரணை வரை நடைமுறையில் இருக்கும் எனவும், கூடுதல் புகார்களை தெரிவிக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

