ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!
அண்மைய நாட்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கோலி இல்லாமல் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கே உவப்பானதாக அமையவில்லை.
கோலி ஓய்வு முடிவில் பிசிசிஐ அவரை மீண்டும் விளையாட வைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் ஓய்வு முடிவு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு அதில் யாரும் தலையிட முடியாது என்று பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கோலி ஓய்வு குறித்த உறுதியான முடிவை ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே பிசிசிஐயிடம் கூறிவிட்டதாகத் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ஆனால் மே மாத தொடக்கத்தில்தான் இந்த செய்தி வெளியுலகுக்குக் கோலியால் அறிவிக்கப்பட்டது.