1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 28 மே 2025 (10:27 IST)

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

ஐபிஎல் 2025 சீசனின் கடைசி ப்ளே ஆஃப் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத்தின் மூலம் 227 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களோடு 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய ஆர் சி பி அணியும் தொடர்ந்து அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆன பின்னர், ஆர் சி பி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அதன் பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் ஷர்மா கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினர்.

ஆர் சி பி அணியைத் தற்காலிகமாக வழிநடத்திய ஜிதேஷ் ஷர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றி நோக்கி அணியை வழிநடத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸ் அவரது இதுவரையிலான சிறந்த இன்னிங்ஸாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்றபின்னர் பேசிய அவர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் “விராட் கோலி அவுட் ஆனதும் நான் களத்துக்கு சென்றபோது கடைசிவரை களத்தில் இருக்கவேண்டும் என நினைத்தேன். எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணன் இதைதான் என்னிடம் கூறுவார். அவர் என்னிடம் ‘உன்னால் முடியும். எந்தவொரு சூழலாக இருந்தாலும் போட்டியை முடிக்கும் திறன் உன்னிடம் உள்ளது” என்பார்” என பேசியுள்ளார்.