‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிரடிக்குப் பெயர் போன அந்த அணி பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் பெட்டிப் பாம்பாய் சுருண்டு கிடக்கின்றனர். இந்த இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக 16 ஆவது ஓவரில் எட்டியது.
இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்தது. ஐதராபாத் அணி பேட்ஸ்மேன் இஷான் கிஷான் பேட் செய்யும் போது தீபக் சஹார் வீசிய பந்தை பின்பக்கமாக தட்டிவிட நினைத்தார். ஆனால் பந்து கீப்பர் வசம் சென்று தஞ்சமடைந்தது. இந்த பந்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே விக்கெட்டுக்கு அப்பீல் செய்யாத போதும் இஷான் கிஷான் தானாகவே களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் குழம்பிய நடுவர் பின்னர் அவர் செல்வதைப் பார்த்து அவுட் என அறிவித்தார். ஆனால் பின்னலையில் பந்து அவர் பேட்டில் படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாக இஷான் கிஷான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “இத்தனை வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த சம்பவம் என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.” எனக் கூறியுள்ளார்.