பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..
இரண்டாம் கட்ட சிறப்புத் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்விற்கான விண்ணப்பங்களில் பெயர் எழுத்து பிழை, இனிஷியல், பிறந்த தேதி, பாலினம், சாதி விவரங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றில் தவறுகள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்வின்போது விண்ணப்பதாரர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளால், நுழைவுச்சீட்டு மற்றும் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்து திருத்தி கொள்ள வரும் நவம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்கள் 'எடிட்' செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்குள் திருத்தம் செய்யாவிட்டால், பின்னர் சான்றிதழில் பிழைத்திருத்தம் கோரும் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாது.
மேலும், ஜூலை மாத தேர்வில் பயன்படுத்தப்பட்ட பழைய பணி சான்றிதழ் படிவம் இனி செல்லாது எனவும், அக்டோபர் 26-க்குப் பிறகு உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்ற புதிய பணி சான்றிதழ் படிவத்தை மட்டுமே பதிவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் விண்ணப்பம் முழுமையாக நிராகரிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

