தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்கள்.. விரைவில் நிறைவேற்றமா?
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, அதாவது 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 15 முதல் 18 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா எளிதில் வெற்றி பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
2029-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், தொகுதி மறுசீரமைப்பு மூலம் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து அதிகபட்சமாக 850 ஆக உயர்த்த இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்கள் எழுப்பியுள்ள கவலைகளை போக்கும் விதமாக, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தற்போதைய விகிதாச்சாரத்தை தக்கவைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்களை 50 சதவீதம் உயர்த்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் முறைப்படி முடித்து வைக்கப்படாமல் 91 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால், குறுகிய கால அறிவிப்பில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வை கூட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

