பிரபாஸ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சுபாஷ் சந்திரபோஸ் பேரன்.. மத்திய அமைச்சருக்கு கடிதம்...
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில், ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஃபௌஜி' திரைப்படத்தின் டீசர், இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசரில், அடால்ஃப் ஹிட்லரிடம் நேதாஜி ஒரு கற்பனை பாத்திரமான 'ஃபௌஜி' என்பவரை அறிமுகப்படுத்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். வரலாற்றையும் கற்பனையையும் கலந்து சொல்வது குற்றம் என கூறியுள்ள அவர், இது குறித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த நேதாஜியை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த டீசர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தணிக்கை வாரியம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த டீசரை உடனடியாக இணையதளங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பான தணிக்கை வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்புக் குழு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

