ரூ. 20 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம்.. இன்று ரூ.2.5 கோடி வருமானம்.. 3 இந்தியர்கள் சாதனை...
பீகாரை சேர்ந்த மூன்று எம்பிஏ பட்டதாரிகள், விவசாய கழிவாக வீசப்படும் வாழைத்தண்டு மூலம் மிகப்பெரிய வெற்றியை சாதனை படைத்துள்ளனர்.
ஜகத் கல்யாண், சத்யம் குமார் மற்றும் நிதீஷ் குமார் வர்மா ஆகிய நண்பர்கள் இணைந்து 2021ஆம் ஆண்டு 'தருவர் அக்ரோ' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினர். ரூ. 20 லட்சம் ஆரம்ப முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், விவசாய கழிவுகளில் இருந்து யோகா பாய்கள், கூடைகள், ஃபைல் ஃபோல்டர்கள் மற்றும் இயற்கை நார்களை தயாரித்து வருகிறது. மேலும், வாழைப்பழ கழிவுகள் மூலம் சில பொருட்களை தயாரிப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பல்வேறு சவால்களை கடந்து இந்நிறுவனம் ரூ. 2.5 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, உள்ளூர் பெண்களுக்கு, குறிப்பாக 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை துறந்துவிட்டு, சொந்த மாநிலத்தில் புதிய தொழிலை தொடங்கி சாதனை படைத்துள்ள இந்த இளைஞர்களின் பயணம் பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

