வெள்ளி, 10 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2025 (15:24 IST)

உலக நாடுகளை உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்! விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு!

Syrup

இந்தியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 20 குழந்தைகள் பலியான விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசை அணுகியுள்ளது உலக சுகாதார அமைப்பு

 

காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை குடித்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. 

 

இது தொடர்பாக மருந்து நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மருந்தில் டை எத்திலின் கிளைகோல் என்ற ரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த மருந்து விநியோகிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உடனடி எச்சரிக்கை செய்யப்பட்டு, மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிறுவனத்தின் நிறுவனர் ரங்கநாதன் மத்திய பிரதேச போலீஸால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அந்த மருந்து ஆலையை தற்காலிகமாக மூடியுள்ளது.

 

இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகள் பலவற்றிற்கும் 90 சதவீதம் மருந்துகள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகள் ஏதேனும் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது.

 

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு 3 இருமல் மருந்துகளில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகள் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி முறைப்படுத்தலில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K