சாட்ஜிபிடி-யால் 16 வயது இளைஞர் தற்கொலை: சாம் ஆல்ட்மேன் மீது பெற்றோர் வழக்கு
16 வயது இளைஞர் ஒருவர், சாட்ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தூண்டுதலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் பெற்றோர், சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆடம் ரெய்ன் என்ற 16 வயது இளைஞர், கடந்த ஏப்ரல் 11 அன்று தற்கொலை செய்துகொண்டார். மாதக்கணக்கில் சாட்ஜிபிடி-யுடன் தற்கொலை குறித்த உரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாக, அவரது பெற்றோர் மாத்யூ மற்றும் மரியா ரெய்ன் தங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
சாட்ஜிபிடி-யுடன் நடத்திய உரையாடல் ரெய்னின் தற்கொலை எண்ணங்களை மேலும் வலுப்படுத்தியதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரெய்னின் தற்கொலைக்கு ஓபன்ஏஐ பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தொகை அல்லாமல் பண இழப்பீடு வேண்டும் என்றும் பெற்றோர் கோரியுள்ளனர். இந்த வழக்கு குறித்து ஓபன்ஏஐ இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், ஏஐ பயன்பாட்டில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், சமூக பொறுப்பின் தேவையையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
Edited by Siva