ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்.. ரூ.26 கோடி வசூல்! அட்லீக்கு லாபம் கொடுத்த பத்தா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படங்களில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வந்து, விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவால் வசூலில் முன்னேறிய திரைப்படமாக விஜய் சேதுபதியின் பத்தா மாறியுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பத்தா . அட்லீயின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஒரு ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத உறவையும், அதன் மூலம் நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே விஜய் சேதுபதியின் நடிப்பு, சிறுவன் சாய் பிரித்விராஜின் கதாபாத்திரம் மற்றும் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில், கதையை முழுநீளப் படமாக விரிவுபடுத்திய விதம் மற்றும் இரண்டாம் பாதையின் வேகம் குறித்து சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. மொத்தத்தில் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் வந்ததை அடுத்து படத்தின் வசூலும் அதிகரிக்க தொடங்கியது.
முதல் நாளில் சுமார் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்ட பத்தா , அதன் பின்னர் வசூலில் முன்னேற்றம் கண்டது. 13 நாட்கள் முடிவில் படம் சுமார் ரூ.25.83 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 13வது நாளான நேற்றும் சுமார் ரூ.1.22 கோடி வசூல் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் சம்பளத்தைக் கணக்கில் சேர்க்காமல் பார்த்தால், பத்தா படத்தின் தயாரிப்பு செலவு கிட்டத்தட்ட ரூ.10 கோடிக்கும் குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மதிப்பீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், திரையரங்க வசூல் மட்டுமே ரூ.26 கோடியை நெருங்கியுள்ள நிலையில், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைகள் உள்ளிட்ட திரையரங்கு அல்லாத வருவாய்களையும் சேர்த்தால் தயாரிப்பு தரப்புக்கு படம் லாபகரமானதாக அமைந்திருக்கலாம் என திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது
பத்தா வெளியான காலகட்டத்தில் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா , அசோக் செல்வன் நடித்த அன்பில் அவன் உள்ளிட்ட படங்களும் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட்டன. ஆரம்ப மூன்று நாட்களிலேயே பத்தா ரூ.8.08 கோடி வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், சிக்மா ரூ.5.60 கோடியும், அன்பில் அவன் ரூ.1.90 கோடியும் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் சிக்மா சுமார் ரூ.8 கோடி அளவிலும், அன்பில் அவன் சுமார் ரூ.4 கோடி அளவிலும் வசூல் செய்ததாக மற்றொரு பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் ஒரே காலகட்டத்தில் திரைக்கு வந்த இந்தப் படங்களில் வசூலில் முன்னிலை பெற்ற படமாக பத்தா மாறியுள்ளது.

