நடிப்புக்கு குவியும் பாராட்டு... ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி ?
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அப்பா குட்டி திரைப்படம், நேற்று (நவம்பர் 20) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இரவுக்கு ஆயிரம் கண்கள் , கண்ணை நம்பாதே போன்ற த்ரில்லர் படங்களைக் கொடுத்த மு. மாறன், இம்முறை எமோஷனல் டிராமா கதைக்களத்தைக் கையில் எடுத்துள்ளார்.
பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் லிதன்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பகவதி பெருமாள், அருவி மதன், முருகானந்தம், ஹரிப்ரியா இசை உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிப்பது மட்டுமின்றி படத்திற்கு இசையமைத்து, எடிட்டிங் பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டுள்ளார்.
தனது மகள் மீது அதீத அன்பு கொண்ட ஒரு தந்தை, அவளுக்கு ஏற்படும் ஆபத்துகளை எப்படி எதிர்கொண்டு பாதுகாக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கரு. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலிருந்து நலல்ல் விமர்சனங்களை பெற்று வருகிறது.
விமர்சன ரீதியாக நடிப்புக்குப் பாராட்டு கிடைத்திருந்தாலும், வசூல் ரீதியாக இப்படம் சற்று மந்தமான தொடக்கத்தையே பெற்றுள்ளது. பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளமான சாக்னில்க் (Sacnilk) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 551 காட்சிகளில் திரையிடப்பட்ட அப்பா குட்டி , முதல் நாளில் ரூ.30 லட்சம் நிகர வசூலை (Net Collection) ஈட்டியுள்ளது. இதன் மொத்த வசூல் (Gross) ரூ.34 லட்சமாக பதிவாகியுள்ளது.

