1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2025 (08:57 IST)

புஷ்பா 2 படத்தில் என் இசை ஏற்கப்படவில்லை… இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. படம் திரையரங்குகள் மூலமாக 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இதில் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே படம் ரிலீஸாகி ஓடிடியிலும் கலக்கியது.

இந்த படத்துக்கு பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசைக்கு சாம் சி எஸ்-ம் பணியாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் இந்த படத்தில் தானும் பணியாற்றியதாகக் கூறியுள்ளார். அதில் “புஷ்பா 2 படத்தின் பின்னணி இசைக்காக 10 நாட்கள் பணியாற்றி மூன்று இசை குறிப்புகளைக் கொடுத்தேன். ஆனால் என்னுடைய இசைக் குறிப்பு ஏற்கப்படவில்லை. அது இயக்குனர் எடுத்த முடிவு” எனக் கூறியுள்ளார்.