செவ்வாய், 8 ஜூலை 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 ஜூலை 2025 (08:35 IST)

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார்.  அதையடுத்து மீண்டும் இயக்குனராகும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் நாவலில் இருந்து தழுவி உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா என பல மொழிக் கலைஞர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சத்யசிவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஃபிரீடம் திரைப்படம் இம்மாதம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார் “நான் என்னுடைய படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் நடத்துவதில்லை. அதன் மூலம் மாணவர்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.