ஐடி ஊழியரைத் தாக்கிய விவகாரம்… லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்!
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், ஐடி ஊழியர்கள் அடங்கிய மற்றொரு குழுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு பிறகு, ஐடி ஊழியர் ஒருவரை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இந்த கடத்தலின்போது நடிகையும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான ஐடி ஊழியரின் நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன் மற்றும் அனீஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் லட்சுமி மேனனைக் கைது செய்வதற்கு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார் லட்சுமி மேனன். நேற்று நடந்த விசாரணையில் வழக்கில் சமரசம் செய்துகொண்டால் முன் ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என்று எதிர்த்தரப்பு கூறியதால் லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.