ரூம் போட்டு கொரியா படத்துல இருந்து காப்பி அடிக்குறாங்க… இயக்குனர்களை சாடிய கஸ்தூரி ராஜா!
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா. இவர் ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.
இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியராகவும் தன்னுடையப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய எட்டுப்பட்டி ராசா மற்றும் “ஒத்த ரூபாயும் தரேன்” உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டாகின. சமீபத்தில் இவர் எழுதிய ஒத்த ரூபாயும் தரேன் பாடல் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்டது. அது சம்மந்தமாக தன்னிடம் அனுமதிக் கேட்கவில்லை என அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இளம் இயக்குனர்கள் குறித்துப் பேசியுள்ள அவர் “சமீபத்தில் வந்த டூரிஸ்ட் பேமிலி படத்தில் இயக்குனர் கதைக்கு என்ன தேவையோ, அதைக் காட்சியாக வைத்திருந்தார். ஆனால் இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் நிறையப் படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் என எடுத்து காட்சிகளை வைக்கிறார்கள். 10 பேர் சேர்ந்து ஹோட்டல்ல உக்காந்துட்டு கொரியன் படம், ஜப்பான் படங்களை எல்லாம் பார்த்து காப்பி அடிக்கிறார்கள். இதுதான் இப்போதைய தமிழ் சினிமா நிலை” எனக் கூறியுள்ளார்.