பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழகம் மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மிகப்பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியதாக சொல்லப்பட்டது.
ஆனால் அவரால் சொன்ன தேதியில் முன்பணத்தைக் கொடுத்து ஒப்பந்தத்தை உறுதி செய்ய முடியாததால் அவரிடம் இருந்து கைமாறலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தமிழக விநியோக உரிமை ஏரியா வாரியாக தனித்தனியாக ஏழு பேரிடம் பிரித்து விற்கபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தமிழக விநியோக உரிமை சுமார் 105 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்தவொரு படத்துக்கும் இவ்வளவு பெரிய வியாபாரம் நடந்ததில்லை என சொல்லப்படுகிறது.