இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!
தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் அடிக்கடி இளையராஜா பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு தமிழரும் தங்கள் வீட்டில் ஒருவராகவே இளையராஜா மனதளவில் நெருக்கமாக உணர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு அவர் சென்றபோது கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தில் அவர் நுழைந்தபோது அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் அந்த மண்டபத்தின் படியருகே நின்று கொண்டே அவர் கோயில் மரியாதையைப் பெற்றுக்கொண்டுள்ளார். உலகளவில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த ஒரு இசைஞானியை, தீவிர கடவுள் பக்தரை இவ்விதமாக அவமானப்படுத்தியது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து தற்போது இந்த விவகாரம் சம்மந்தமாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “ஆண்டாள் கோயில் மரபு மற்றும் பழக்கப்படி அர்த்த மண்டபத்துக்குள் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள் மற்றும் மடாதிபதிகள் மட்டும்தான் செல்ல முடியும். இளையராஜா அந்த மண்டபத்துக்குள் செல்ல முயன்றபோது இங்கிருந்தபடியே வழிபடலாம் என சொன்னதைக் கேட்டு அவர் அங்கிருந்தபடியே வணங்கினார். அவருடன் வந்த ஜீயர் மட்டும் உள்ளே சென்று வழிபாடு செய்தார்” எனக் கூறியுள்ளது.