1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (18:23 IST)

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படத்திற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, சில நிமிடங்களுக்கு முன்பு இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
 
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படம் வரவிருக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த தேதியில் படம் வெளிவரவதால், சுதந்திர தின விடுமுறையை இணைத்துக் கொண்டே நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக இப்படத்திற்கு சிறப்பான ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மற்ற எந்த பெரிய திரைப்படமும் அந்த நாளில் வெளியிடப்படவில்லாததால், இப்படம் சோலோ ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும், இப்படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, பகத் பாசில் உள்ளிட்ட பிரபல பான் இந்தியா நடிகர்கள் நடித்து இருப்பதால், இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரமாண்ட வெளியீடு காண உள்ளது. தமிழ் திரையுலகில் அதிக வசூல் சாதனை படைக்கும் வாய்ப்பு இப்படத்திற்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம், அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
Edited by Siva