திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 29 செப்டம்பர் 2025 (11:41 IST)

பிரபல குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் பலி.. 15 சகோதரரும் பரிதாப மரணம்..!

பிரபல குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் பலி.. 15 சகோதரரும் பரிதாப மரணம்..!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 வயது குழந்தை திரை நட்சத்திரமான வீர் சர்மா மற்றும் அவரது 15 வயது சகோதரர் ஷௌரியா சர்மா ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று அதிகாலை இந்தத் தீ விபத்து நடந்துள்ளது. வீர் மற்றும் ஷௌரியா இருவரும் நான்காவது மாடியில் உள்ள தங்கள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டில் உள்ள வரவேற்பறையில் தீ விபத்து ஏற்பட்டது. மற்ற அறைகளுக்குத் தீ பரவாவிட்டாலும், புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறி இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
 
அருகில் இருந்தவர்கள் புகை வருவதை பார்த்து, உடனடியாக வீட்டின் கதவை உடைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
தீ விபத்து நடந்தபோது, அவர்களின் தந்தை ஜிதேந்திர சர்மா, ஒரு பஜன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததாகவும், தாய் ரீட்டா சர்மா மும்பையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பலியான இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
 
வீர் சர்மா, 'ஸ்ரீமத் ராமாயண்' மற்றும் 'வீர் ஹனுமான்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். ஜெய்தீப் அஹ்லாவத்துடன் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 
 
Edited by Siva