1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 16 ஜூலை 2025 (09:47 IST)

தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து! - 21ம் ஆண்டு நினைவஞ்சலி!

Kumbakonam school fire accident

தமிழகத்தை உலுக்கிய விபத்து சம்பவங்களில் முக்கியமான ஒன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. 2004ம் ஆண்டை இரண்டு காரணங்களுக்காக தமிழக மக்களால் மறக்கவே முடியாது. ஒன்று, 2004 ஜூலை மாதம் ஏற்பட்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து, இரண்டாவது 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி பேரலை.

 

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வந்தனர். 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று பள்ளியில் மதிய உணவு அறையில் உணவு தயாரிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டது. பள்ளி கட்டிடம் பெரும்பாலும் கூரை வேய்ந்த பகுதி என்பதால் தீ மளமளவென பரவியுள்ளது. தீ விபத்தில் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பலர் தப்பியோடிவிட்ட நிலையில், பள்ளியறையில் அமர்ந்திருந்த 94 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

 

Kumbakonam school fire accident

 

தமிழகத்தை பெரும் வேதனைக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு, பள்ளி கட்டிடங்கள் கூரை வேய்ந்ததாக இருக்கக்கூடாது. ஓட்டு கட்டிடம், மாடி கட்டிடமாக இருத்தல் வேண்டும். சத்துணவு சமையல் அறை வகுப்பறைகளை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என பல விதிமுறைகள் வகுக்கப்பட்டது.

 

94 குழந்தைகள் பலியான கொடூர தீ விபத்தின் 21வது ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. 94 குழந்தைகளின் படங்களோடு அமைந்த பேனர் முன்பு பொதுமக்கள், உறவினர்கள் குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K