வெள்ளி, 7 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 நவம்பர் 2025 (11:12 IST)

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க நினைப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது என்று நடிகர் அஜித் குமார் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அஜித் குமார் தெரிவித்திருப்பதாவது: 
 
“ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டி, இளைஞர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக ஒருசிலரால் அவர்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். இங்கே எதையெடுத்தாலும் பரபரப்பாகத்தான் முயல்வார்கள். ஆனால் நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்குப் பிடித்த பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன்.
 
ஒரு காலத்தில் சினிமா பத்திரிக்கையாளர், விளையாட்டு பத்திரிக்கையாளர், அரசியல் பத்திரிக்கையாளர் என்று இருந்தனர். ஆனால் இன்று அரசியல் பத்திரிக்கையாளர்களைவிட ஒருசில சினிமா பத்திரிக்கையாளர்ளே மிகவும் அரசியல் மயமாகியுள்ளனர். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக, அவர்கள் இதை அஜித்துக்கும் விஜய்க்கும் இடையிலான மோதல், அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான போர் என்பதுபோல ஆக்கிவிட்டனர். நாம் நச்சுக் கலந்த ஒரு சமுதாயமாக மாறிவிட்டோம்.
 
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்னுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி 15-20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியிருக்கும். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என் படத்தை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல ஆண்டுகளாக சொல்லிவருகிறேன். படத்தை பாருங்கள் என்று மக்களை வற்புறுத்த செய்யமாட்டேன். ஓட்டும் கேட்டு வரமாட்டேன். படங்களில் நடிப்பது மற்றும் கார் பந்தயங்களில் ஈடுபடுவது என எனக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்துவேன்.
 
எப்போதெல்லாம் ரேஸ் காரில் அமர்கிறேனோ, அப்போதெல்லாம் உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் எனக்கு எந்தவொரு திட்டமும் உள்நோக்கமும்  இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கை மிகவும் எளிதில் உடையக்கூடியது. என்னால் முடிந்தவற்றை வைத்து, முடிந்த வரை நன்றாக வாழ விரும்புகிறேன்.
 
கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. அது நீண்ட நாள்களாக நடக்கக் காத்திருந்த ஒரு விபத்து. இதற்கு முன் ஆந்திர சினிமா திரையரங்கில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானம் முன்பில் நடந்தது. பல நாடுகளில் நடந்திருக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள், நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். எனது இந்தக் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படாது என்று நம்புகிறேன்.
 
ஒரு சில ஊடகங்கள், ரசிகர்கள் மீது பழியை சுமத்த முயல்கின்றன. ஆனால் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். எனது தந்தை இறந்த போது, அவரது பூத உடலை எடுத்துச் சென்றபோது ஒரு சில ஊடகங்கள் எங்கள் பின்னால் கேமிராக்களுடன் பின் தொடர்ந்தனர். உயிரில்லாத அந்த உடலின் விடியோ காட்சியை எடுக்க முயற்சித்தனர். இதனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களுடைய உயிரைப் பணயம் வைக்க நேரிட்டது. ஒரு சில ஊடகங்களே இப்படி இருக்க, ரசிகர்களையோ, தொண்டர்களையோ குறைச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது? ஏற்கெனவே சொன்னது போன்று நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன்தான். என்னிடமும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் குடிமக்களின் கடமையை உணர்ந்து அதனைப் பின்பற்ற வேண்டும். வாக்களிப்பதை நான் ஒரு குடிமகனின் கடமையாகப் பார்க்கிறேன்.
 
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர், அமைதியாக இருப்பது நல்லது. நான் விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். எல்லோரும் அவர்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நான் வாழ்த்துகிறேன்.
 
இதற்கிடையில் என்னுடைய பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கூளாகிறது. என்னை பிடிக்காதவர்கள் எப்பொழுதுமே நான் வேற்றுமொழிக்காரன் என்று கூறிவருகின்றனர். ஒரு நாள் வரும், அன்று இதே நபர்கள் என்னை உரத்த குரலில் தமிழன் என்று அழைப்பார்கள். கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன். இதற்காக என்னுடைய உடலையும் முழு ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை. உங்களின் அன்பு, ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கும் மிக நன்றி.
 
தமிழகமே விழித்துக்கொள். இந்தியாவே விழித்துக்கொள். அன்புடன் அஜித்.” இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva