வியாழன், 12 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ஒளவையார் விரதம்...!!

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். அதிலும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற  நன்னாளாகும். 

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும்  உண்டு. 
 
பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம்  இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.
 
இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும்  நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
 
ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.
 
குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை  கடைபிடிக்கின்றனர்.