பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 8,23,261 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இவர்களில் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் இந்த தேர்விலும் மாணவிகள் சாதனை செய்துள்ளனர். மாணவிகள் 4,03,949 பேர் தேர்ச்சி பெற்று, 95.13% வெற்றிநிலையில் உள்ளனர். மாணவர்கள் 3,39,283 பேர் தேர்ச்சி பெற்று, 88.70% சதவீதத்துடன் நிறைவடைந்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள் 6.43% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வுக்கு வராதவர்கள் 11,025 பேர். தேர்வு எழுதிய மொத்த பள்ளி மாணவர்கள் 8,07,098. இதில் மாணவிகள் 4,24,610 பேர், மாணவர்கள் 3,82,488 பேர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 9,205 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,460 பேர் தேர்ச்சி பெற்று, 91.91% வெற்றி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் எழுதி, 113 பேர் (90.40%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனித்தேர்வர்கள் 4,326 பேர் எழுத, அவர்களில் 950 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
Edited by Mahendran